இந்த இணையத்தளம் புத்துருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
Tamilcholai Geetham
நுழைவு / Login

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு

ASSOCIATION TAMOULCHOLAI - FRANCE

பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு

எதிர்வரும் நிகழ்வுகள்
Section Header

தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கு

ஆய்வரங்கு 2026

தியாகதீபம் திலீபன்
ஆய்வரங்கு-2026

கல்வி • ஆய்வு • ஆவணப்படுத்தல் • தலைமுறைக் கடத்தல்

ஒரு கல்விக்குமுகம் தனது இனத்தை வழிநடத்தும் கடமைக்குப் பொறுப்புடையதாகிறது. குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளில் வாழும் தலைமுறைகளுக்கு, ஒரு இனத்தின் வரலாறு, போராட்டத்தின் நோக்கம், இலக்கு மற்றும் அது எதிர்கொண்ட வரலாற்றுச் சூழல்கள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதிலும், அவற்றை முறையாகப் பதிவு செய்வதிலும் முக்கியப் பங்கு உள்ளது.

இந்த அடிப்படையிலேயே, புலம்பெயர் சூழலில் தமிழர்களின் வரலாற்றையும் போராட்ட வரலாற்றையும் எதிர்கால இருப்பு தொடர்பான கணிப்புகளை ஆய்வுகளின் வழியாகப் பதிவு செய்து, அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் உணர்ந்தது.

தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மருத்துவப் படிப்பைத் துறந்து தனது கல்விப் பாதையிலிருந்து போராட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்ட தியாகதீபம் திலீபனின் பெயரில் ஆய்வரங்கை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் கருதியது. அதன் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு முதலாவது தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கு நடத்தப்பட்டது.

பட்டப்படிப்பின் மகுடமாக ஆய்வு

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் தமிழியல் பட்டப்படிப்பை நிறைவுசெய்யும் பட்டகர்கள், தமது மூன்றாண்டுப் பட்டப்படிப்பின் மகுடமாக ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் வெறுமனே கல்விப் பயிற்சியாக முடிவடையாமல், அவை ஆய்வுக் கட்டுரைகளாக வடிவமைக்கப்பட்டு, தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கில் ஒப்படைக்கப்படுகின்றன.

இதன் மூலம் தமிழியல் கல்வி, ஆய்வு மற்றும் சமூக வரலாற்றுப் பதிவாக்கம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மாணவர்கள் தாம் கற்ற அறிவை ஆய்வாக மாற்றி, அதனை குமூகத்தின் அறிவுச் செல்வமாக வழங்குவதற்கான வாய்ப்பையும் இவ்வாய்வரங்கு உருவாக்குகிறது.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஆய்வரங்கு

தியாகதீபம் திலீபன் உண்ணாநோன்பிருந்து உயிர்க்கொடை அளித்த செப்டெம்பர் 26ஆம் நாளை உள்ளடக்கிய செப்டெம்பர் 15 முதல் 26 வரையான காலப்பகுதியில் வரும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை இவ்வாய்வரங்கை நடத்துவதென தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தீர்மானித்தது.

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆய்வரங்கு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது.

பல்துறை ஆய்வுகளுக்கான தளம்

தமிழ்மொழி, பண்பாடு, பொருண்மியம், அரசியல், பெண்ணியல், புலப்பெயர் வாழ்வியல் எனப் பல்வேறு துறைகளை மையமாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாய்வுகள் ஆய்வுக் கட்டுரைகளாக வடிவமைக்கப்பட்டு, தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

இதன் மூலம் தமிழ்க் குமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கான அறிவுத்தளமாகவும் இவ்வாய்வரங்கு விரிவடைந்துள்ளது.

கல்வியிலிருந்து வரலாற்றுப் பதிவாக்கம் வரை

ஒரு பட்டப்படிப்பின் நிறைவாக மேற்கொள்ளப்படும் ஆய்வு, ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படுவதன் மூலம் தனிப்பட்ட கல்விச் சாதனையாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் அறிவுப் பதிவாகவும் மாறுகிறது. இதுவே தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கின் தனித்துவமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.

புலம்பெயர் சூழலில் பிறந்து வளர்கின்ற அடுத்த தலைமுறையினர் தமது மொழி, பண்பாடு, வரலாறு, சமூக வாழ்வியல் மற்றும் போராட்ட வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்குத் தேவையான ஆய்வுப் பதிவுகளை உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.

அந்தத் தேவையை உணர்ந்து, கல்வியை ஆய்வாகவும், ஆய்வை ஆவணமாகவும், ஆவணத்தை அடுத்த தலைமுறைக்கான அறிவுச் செல்வமாகவும் மாற்றும் பணியினைத் தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

2015ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம், 2026ஆம் ஆண்டில் தனது 10வது ஆய்வரங்கை எட்டியுள்ள நிலையில், இது ஒரு நிகழ்வின் தொடர்ச்சியாக மட்டுமன்றி, புலம்பெயர் தமிழ்ச் சூழலில் உருவாகி வரும் ஒரு நீண்டகால ஆய்வுப் பாரம்பரியத்தின் பதிவாகவும் அமைந்துள்ளது.

“கல்வி – ஆய்வு – ஆவணப்படுத்தல் – தலைமுறைக் கடத்தல்”
இந்த நான்கு நிலைகளையும் இணைக்கும் அறிவுப் பயணமாக தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கு தொடர்ந்து பயணிக்கிறது.