தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் 2ஆவது ஊடகப்பயிலரங்கு, 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
தமிழ்ச்சோலைத்தலைமைப் பணியகத்தின் தமிழியல் துறை விரிவுரை மண்டபத்தில் நடைபெற்ற இப் பயிலரங்கில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் பயிலும் 25 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
தமிழ்ச்சோலை மாணவர்களை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக வளப்படுத்தும் நோக்கில், இத்துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான பயிற்சிகள் இப்பயிலரங்கில் வழங்கப்பட்டன.
காலை 10 மணிக்கு, அகவணக்கத்தைத் தொடர்ந்து, தமிழ்ச்சோலைப் பண் மாணவர்களால் இசைக்கப்பட்டு, அதன்பின் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் பொறுப்பாளர் திருமிகு. நாகயோதீஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி, பயிலரங்கினை இனிதே தொடங்கி வைத்தார்.
பயிலரங்கினை, வளவாளர்களாக ஊடகம் மற்றும் கல்வித்துறையினைச் சார்ந்த திருமிகு. விநாசித்தம்பி மோகனதாசன் மற்றும் திருவாட்டி குமணன் சிவானுஜா ஆகியோர் நெறிப்படுத்தினர்.
மனத்தடைகளின்றிக் கருத்துகளை வெளியிடல், குரற்பயிற்சி , உச்சரிப்பு, உடல் மொழி வெளிப்பாடுகள், தன்னம்பிக்கையோடு அரங்கைப் பயன்படுத்துதல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்குரிய பயிற்சிகள் போன்றவை பயிலரங்கின் உள்ளடக்கமாக அமைந்திருந்தன. குழுச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்குபற்றியதைக் காணக்கூடியதாக இருந்தது.
வானொலி , தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்தப் பயிலரங்கு பயனுள்ளதாக அமைந்தது.
நிறைவாக, அரங்கவியலாளர் திருமிகு. கெங்கேஸ் அவர்கள் பயிலரங்கின் தனது அவதானிப்புகளை கருத்துரையாக வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ்ச்சோலை மாணவர்களை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக வளப்படுத்தும் நோக்கிலான ஊடகப் பயிலரங்கு.
